புதன், 28 ஆகஸ்ட், 2013

ஆப்பிளை விட விட கொய்யா உசத்தி

ஆப்பிளை விட விட கொய்யா உசத்தி

நன்றாக பழுத்த கொய்யா பழத்துடன் மிளகு, எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் உடல்சோர்வு, பித்தம் நீங்கும், கொய்யாவுடன் சப்போட்ட பழத்தை சேர்த்து தேன் கலந்து சாப்பிட்டால் உடல் வலுப்பெறுவதோடு ரத்தம் சுத்தமாகும்.

மதிய உணவுக்கு பிறகு கொய்யாபழம் சாப்பிட்டால் நன்றாக ஜீரணம் ஆவதோடு, மலச்சிக்கல் நீங்கும். வயிற்றுப்புண் குணமாகும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் சக்தியும், வயிற்றுப்போக்கு, மூட்டுவலி,அரிப்பு, மூலநோய், சீறுநீரக கோளாறு உள்பட பல நோய்கள் கட்டுப்படுத்தும் ஆற்றலும் அதற்கு உண்டு.

கொய்யா இலைகளை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து, தலையில் பற்று போட்டால் கடுமையான தலைவலி, ஒற்றைத் தலைவலி நீங்கும். இலைகளை அரைத்து தண்ணீரில் கலந்து பருகினால் வயிற்றுவலி, தொண்டைப்புண் போன்ற நோய்கள் குணமாகும்.

கொய்யாப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. ஏனென்றால் கொய்யாவில் அதிக அமிலத்தன்மை இருப்பதால் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிற்றில் பல தொந்தரவுகளை ஏற்படுத்தும். கொய்யாவில் ஆப்பிளைவிட கூடுதலான சத்துகள் உள்ளன.

இது யாருக்கும் தெரிவதில்லை. கொய்யா மலிவான விலையில் கிடைப்பதால் அதன் மகத்துவத்தை யாரும் உணர்வதில்லை. உண்மையில் கொய்யாப்பழம் விலை உயர்ந்த ஆப்பிளை விட கூடுதல் சக்தியும், ஆரோக்கியமும் கொண்டது. 

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

கருஞ்சீரகம் சிறந்த நோய் நிவாரணி




குளிர்ச்சியால் ஏற்படும் நோய்களுக்கு கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும். கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி எண்ணெயில் ஊறவைத்துப் பிறகு மூக்கில் சொட்டுகள் விட்டால் கடுமையான ஜலதோஷம் நீங்கும்.கபம்,குளிர் காய்ச்சல், குறட்டை, மூக்கடைப்பு ஆகியவற்றுக்குக் கருஞ்சீரகம் நல்ல பலன் தரும்.

கருஞ்சீரகத்தைத் தூளாக்கி தேனில் கலந்து வெந்நீருடன் சாப்பிட்டால் மூத்திரக் கல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும். மாதவிடாய்ப் போக்கையும் சீராக்கும். கருஞ்சீரகப் பொடியை ஒரு துணியில் கட்டி உறிஞ்சி வந்தால் ஜலதோஷத்திற்கு நல்லது.

தாய்ப் பாலில் ஏழு கருஞ்சீரக வித்துகளை ஊறவைத்துப் பொடியாக்கி உறிஞ்சி வந்தால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும். 5கிராம் கருஞ்சீரகத்தைத் தண்ணீருடன் கலந்து சாப்பிட்டால் சுவாசக் கோளாறு சீரடையும். கருஞ்சீரகத்தை அரைத்துப் பத்துப் போட்டால் தலைவலிக்கு நல்லது.

கருஞ்சீரகத்தைக் (vinegar)ல் வேகவைத்து வாய் கொப்புளித்தால் பல் வலிக்கு நல்ல பலன் கிடைக்கும். கரும்பித்தம் மற்றும் கபத்தால் ஏற்படும் அஜீரணக் கோளாறை அகற்றுவதும் கருஞ்சீரகத்தின் தனிச் சிறப்பாகும்.கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி மெழுகு மற்றும் அல்லி எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்த்தால் தலைமுடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.

கருஞ்சீரக எண்ணெய் பக்கவாத நோய்க்குச் சிறந்த மருந்தாகும். நாய்க்கடி, பிரசவ இரத்தப் போக்குத் தடங்கல், கர்ப்பபை வலி, சிரங்கு, கண்வலி, போன்ற நோய்களுக்கும் கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும். கருஞ்சீரகத்தின் சிறந்த நோய் நிவாரணி என்று நிரூபிக்கப்பட்டுள்ளன. 

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

மணத்தக்காளி மருத்து குணங்கள்




வாய்ப் புண் உள்ளவர்களுக்கு வயிற்றிலும் புண் இருக்கும். இந்த பிரச்சனைக்கு நல்ல மருந்து மணத்தக்காளி கீரை. இக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வர வாய்ப் புண்ணும், வயிற்றுப் புண்ணும் குணமாகும். 100 கிராம் கீரையில் ஈரப்பதம் 82.1%, புரதம் 5.9%, கொழுப்பு 1%, தாது உப்புகள் 2.1%, மாவுச்சத்து 8.9% உள்ளன.

நோயைக் குணமாக்கி உடலின் கட்டுமானப் பகுதியைப் பார்த்துக் கொள்ள 410 மில்லி கிராம் கால்சியமும், மூளை வளர்ச்சி, மனத்திற்கு சுறுசுறுப்பு ஆகிய அளிக்க 70 மில்லி கிராம் எரியம் (Phosphorus), நோய் எதிர்ப்புச் சக்தி அளிக்கும் 11 மில்லி கிராம் வைட்டமின் ‘சி’யும் இக்கீரையில் உள்ளன. மூலநோய்க்கும் குடல் பிரச்னைக்கும் இந்த கீரை நல்ல மருந்து.

மேடைப் பேச்சாளர்கள், பாடகர்களுக்கு தொண்டைக் கட்டிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம். இவர்கள் மணத்தக்காளி கீரையை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது. இக்கீரை உடலில் தோன்றும் வீக்கங்கள், கட்டிகள் முதலியவற்றை எதிர்த்துப் போரிடும்.

அவற்றைக் குணப்படுத்தியும் விடும். சிறுநீர்க் கோளாறுகளை நீக்கும். அத்துடன் சிறுநீர் நன்கு பிரியவும் வழி அமைத்துக் கொடுக்கும். சிறிது கசப்புச் சுவையுடையது இக்கீரை. சமைத்து சாப்பிடும் போது கசப்பு குறைவாய் இருக்கும். நீர்க்கோவை நோய் மகிச்சிறந்த முறையில் குணமாக இக்கீரை பயன்படுகிறது.

இக்கீரையைக் கசாயமாய் அருந்தலாம். அல்லது பருப்பு சேர்த்து மசியல், பொரியல் என்று சாப்பிடலாம். கீரையையும், இளந்தண்டுகளையும் சாறாக மாற்றி ஒரு வேளைக்கு ஆறு மில்லி வீதம் அருந்தலாம். மேற்கண்ட மூன்று முறைகளுள் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினாலும் நீர்க்கோவை நோய் விரைந்து குணமாகும். 

கீரையைப் போலவே பழமும் சக்திவாய்ந்த மருந்தாகும். காசநோயாளிகள் இப்பழங்களைத் தினமும் சாப்பிடுவது நல்லது. மணத்தக்காளியின் காயும், பழமும் மிளகு அளவேதான் இருக்கும். நன்கு பசி எடுத்துச் சாப்பிடவும் இப்பழம் உதவுகிறது. புதுமணத்தம்பதிகள் உடனே குழந்தை பெற்றுக்கொள்ள இப்பழம் போதும்.

இப்பழம் உடனே கருத்தரிக்கச் செய்யும். உருவான கரு வலிமை பெறவும் இப்பழம் பயன்படுகிறது. பிரசவம் எளிதாக நடைபெறவும் பயன்படுகிறது. ஆண்கள் தாதுபலம் பெற இப்பழத்தை அவசியம் சாப்பிட வேண்டும். தேமல், வீக்கங்கள், பருக்கள், கொப்புளங்கள் குணமாக இக்கீரைச் சாற்றைத் தடவலாம்.

உடலில் வலி உள்ள இடங்களிலும் வலிநீக்கும் மருந்து போல இக்கீரைச் சாற்றைத் தேய்த்து உடல் வலி நீங்கப் பெறலாம். நாள்பட்ட நோய் வியாதிகள் குணமாக இக்கீரைச் சாற்றை மோர், தயிர், பால், தேங்காய் தண்ணீர், இளநீர் போன்ற ஏதாவது ஒன்றில் சேர்த்துத் தினமும் அருந்தி வரவேண்டும். மணத்தக்காளிக் காயை வற்றல் போடலாம். வற்றலிலும் மருத்துவக் குணங்கள் சிதையாமல் இருக்கிறது

வியாழன், 22 ஆகஸ்ட், 2013

பல் துலக்க சரியான ‘பிரஷ்’ தேர்வு செய்வது எப்படி?




பல்வேறு அளவுகளிலும் வண்ணங்களிலும் டூத் பிரஷ்கள் கடைகளில் விற்கப்படுகின்றன. பெரியவர்களுக்கென்றும் சிறியவர்களுக்கென்றும் தனித்தனி அம்சங்களுடன் பிரஷ்கள் உள்ளன. கடின ரகம், நடுத்தர ரகம், மென் ரகம் என்றும் குச்சங்களின் வளையும் தன்மையை வைத்து வகைப்படுத்தி பிரஷ்கள் விற்கப்படுகின்றன.

பொதுவாக கடின முனைகள் கொண்ட பிரஷ்கள் தேய்ந்து ஈறுகளை வலுவிழக்கச் செய்கின்றன. அதனால் வேர்கள் வெளிப்பட்டு பற் கூச்சத்தை உண்டாக்கும். ஆகவே, அதை தவிர்த்து மென்மையான அல்லது நடுத்தர வகை பிரஷ்களைப் பயன்படுத்துவது நல்லது. பற்களின் சுத்தத்திற்கு தேய்ப்பதில் தரும் அழுத்தம் முக்கியம் அல்ல.

தேய்க்கும் முறையே முக்கியம். பிரஷ்ஷின் முனைப் பகுதி வாய்க்குள் எளிதில் அடங்கும் அளவு டையதாக இரண்டு பல் அகலத்திற்குக் குச்சங்கள் கொண்டதாய் இருத்தல் அவசியம். குழந்தைகளுக்கெனில், மேற்கண்ட அம்சங்களுடன் மிகச் சிறிய முனைகள்கொண்ட பிரஷ் போதுமானது.

சீரான உயரம் கொண்டதும், 1அல்லது 1.25”நீளம், 5/16” -3/8” அகலம் கொண்டதும், 2-4 வரிசைகளைக் கொண்டதும் ஒவ்வொரு கற்றையிலும் 80/86 முனைகள் உள்ளதுமான பிரஷ் சிறந்ததாகும். லேசான வளைவைக் கொண்ட முனையுள்ள பிரஷ்கள் கடைசி பல் அல்லது ஞானப்பற்களுக்குப் பின்னாலும் சென்றடையும் என்பதால் அவை சிறந்தவையே.

பிரஷ் முனைகள் தேய்ந்து கற்றையிலிருந்து விலகி நிற்கும் போதோ அல்லது நான்கு மாதத்துக்கு ஒரு முறையோ மாற்றுதல் அவசியம். பற்களின் வடிவத்திற்கும், அமைப்பிற்கும் ஏற்ற பிரஷ்ஷை தேர்ந்தெடுக்க முடியாத நிலையில் உங்கள் பல் மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெறுங்கள். 

புதன், 21 ஆகஸ்ட், 2013

சர்க்கரை நோய் கட்டு படுத்துவது எப்படி?




இன்றைய வாழ்க்கை முறையில் நாம் பார்க்கும் முக்கிய நோய்களில் ஒன்றான சர்க்கரை நோய் இன்றைய தலைமுறையினரை பாடாய்படுத்தி வருகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை குறிப்பிட்ட அளவு இல்லாமல், கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் இந்த பாதிப்பு ஏற்படும்.

ஆனால் இதனை உணவு முறை கொண்டும் கட்டுப்படுத்த முடியும். சரியான உணவு வகைகளை உட்கொண்டால், சர்க்கரை நோய் தீவிரத்தின் அளவை கட்டுப்படுத்தலாம். சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க, எதை சாப்பிடலாம், எதை சாப்பிட கூடாது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்று.

சர்க்கரை நோய் இல்லையென்றாலும் சரி அல்லது சர்க்கரையின் அளவு எல்லையில் இருந்தாலும் சரி அல்லது பரம்பரை வியாதி என்றாலும் சரி, சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நோயின் தாக்கத்தில் இருந்து விடுபடுவதோடு தவிர்க்கவும் செய்யலாம்.

இந்தியர்களுக்கு அதற்கான உணவில் கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் புரதம் 60:20:20 விகிதம் இருக்க வேண்டும். இப்போது சர்க்கரை நோய்க்கான மருத்துவர் மற்றும் உணவியல் வல்லுநர்கள், சர்க்கரை நோயை கட்டுப்படுத்த பரிந்துரைக்கும் முதன்மையான 15 வகை உணவுகளை பற்றி பார்ப்போம்.

1.வெந்தயம்: ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை, 100 மி.லி. தண்ணீரில் இரவில் தூங்கும் போது ஊற வைத்து விட்டு, மறு நாள் அந்த வெந்தயத்தை சாப்பிட்டால், உடலில் சர்க்கரை அளவானது கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

2.தக்காளி: நீரிழிவு நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த, உப்பு மற்றும் மிளகு கலந்த தக்காளி சாற்றை, தினமும் காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்

3.பாதாம்: தினமும் தண்ணீரில் ஊற வைத்த 6 பாதாம் பருப்பை சாப்பிட்டால், சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்கும்.

4.தானிய வகைகள்: தானியம், ஓட்ஸ், கொண்டை கடலை மாவு மற்றும் இதர நார்ச்சத்து அடங் கிய உணவுகளை அன்றாடம் சேர்த்துக்கொள்ள வேண்டும். பாஸ்தா அல்லது நூடுல்ஸ் சாப்பிட தோன்றினால், அதனு டன் காய்கறி அல்லது முளைத்த பயறுகளை சேர்த்துக் கொள் ளவும்.

5.பால்: பாலில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதத்தின் கலவை சரியான அளவில் இருக்கும். அதனால் இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவும். எனவே தினமும் இரண்டு முறை பால் குடிப்பது நல்லது.

6.காய்கறிகள்: அதிக நார்ச்சத்துள்ள காய்கறிகளான பட்டாணி, பீன்ஸ், ப்ராக்கோலி மற்றும் கீரை வகைகளை உணவோடு சேர்க்க வேண்டும். இந்த வகையான காய்கறிகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவும்.

7.பருப்பு வகைகள்: பருப்பு வகைகள் மற்றும் முளைத்த பயறுகளை உணவோடு சேர்த்து கொள்ள வேண்டும். கார்போஹைட்ரேட் கலந்த மற்ற உணவுகளை விட, பருப்பு வகைகளால் ரத்த குளுக்கோஸ் தாக்கம் குறைவாகவே இருக்கும். அதனால் இது முக்கிய உணவாக கருதப்படுகிறது.

8.ஒமேகா3: ஒமேகா3 மற்றும் மோனோ அன்சாச்சுரேட் கொழுப்பினி போன்ற நல்ல கொழுப்புகள் கலந்த உணவை உட்கொண்டால் உடலுக்கு நல்லது. கனோலா எண்ணெய், சணல் எண்ணெய், கொழுப்பு மீன் மற்றும் பருப்பு வகைகள் போன்றவற்றில் இயற்கையாகவே இந்த கொழுப்புகள் அடங்கியுள்ளன. மேலும் இதில் கொழுப்பு அளவு குறைவாகவே இருக்கும்.

9.பழங்கள்: அதிக நார்ச்சத்துள்ள பழங்களான பப்பாளி, ஆரஞ்சு, பேரிக்காய் மற்றும் கொய்யாப் பழத்தை சாப்பிட வேண்டும். ஆனால் மாம்பழம், வாழைப்பழம் மற்றும் திராட்சை போன்ற பழங்களில் சர்க்கரையின் அளவு கூடுதலாக இருக்கிறது, அதனால் இதை அதிகமாக உண்ணக் கூடாது.

10.உணவு முறை: அதிகமாக உண்ணுவதால் ஒருவரின் உடலில் உள்ள ரத்த சர்க்கரையின் அளவு கூடுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனால் சிறிய அளவு உணவை போதிய இடைவேளையில் அடிக்கடி உண்ணவும். இது சர்க்கரை அளவு அதிகமாவதையும், கீழே இறங்காமலும் தடுக்கும். வேண்டுமெனில் நடுவே நொறுக்குத் தீனியாக பழங்கள், நார்ச்சத்துள்ள பிஸ்கட், மோர், தயிர், காய்கறியுடன் கலந்த உப்புமா போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

11.முக்கியமான உணவுகள்: சர்க்கரை நோய் உள்ளவர்கள் குறைவான கார்போஹைட்ரேட், அதிகமான நார்ச்சத்து, தேவையான அளவு புரதம், வைட்டமின் மற்றும் கனிமங்கள் கலந்த உணவை உண்ண வேண்டும். இனிப்பு மற்றும் கொழுப்பு அதிகமுள்ள பண்டங்களை உண்ணக் கூடாது. போதிய இடைவேளையில் (5 வேளை) சிறிய அளவில் உணவை உட்கொள்ள வேண்டும்.

12.இயற்கை இனிப்பு: சர்க்கரை நோயாளிகள், கேக் மற்றும் இனிப்பு பண்டங்களில் சர்க்கரைக்கு பதிலாக தேவையான அளவு இயற்கை இனிப்பான தேனை கலந்து கொள்ளலாம்.

13.தண்ணீர் மற்றும் மதுபானம்: நிறைய தண்ணீர், காய்கறி மற்றும் பழச்சாறுகளை பருகவும். மேலும் மதுபானம் குடிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும்.

14.அசைவ உணவு: அசைவ உணவுகளில் மீன் அல்லது சிக்கனை உண்ணலாம். ஆனால் ஆடு மற்றும் மாட்டு இறைச்சியில் அதிக அளவில் தேங்கிய கொழுப்பு இருப்பதால், அதனை தவிர்க்க வேண்டும். மேலும் அதிக கொழுப்புச்சத்து உள்ளவர்கள், முட்டையின் மஞ்சள் கரு, ஆடு மற்றும் மாட்டு இறைச்சியை தவிர்க்க வேண்டும்.

15.உணவு பழக்கம்: இந்தியர்களுக்கான சர்க்கரை நோய் கட்டுப்பாடு உணவில் கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கொழுப்புச் சத்து அடங்கியிருக்க வேண்டும். எப்போதும் சமநிலையான உணவு, உடல் ஆரோக்கியத்திற்கு பக்கபலமாக நிற்கும்.

மேற்காணும் உணவுப் பழக்கத்தை தொடர்ந்து கையாண்டு வந்தாலே சர்க்கரை நோயின் பிடியில் இருந்து 100 சதவீதம் தப்பலாம். சர்க்கரை நோய் கண்டவர்கள் தாங்களாகவே மருந்து கடைகளில் மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதை தவிர்த்து முறையான சிகிச்சையினை டாக்டரிடம் மட்டுமே எடுத்துக்கொள்வது சாலச் சிறந்தது. சர்க்கரை நோயற்ற வாழ்வை பெற முயன்ற அளவு முயற்சிப்போம்

புதன், 26 ஜூன், 2013

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு தொடங்குகிறேன்...

வணக்கம்

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு தொடங்குகிறேன்... ...

சில வேலை காரணமாக நீண்ட நாட்களாக எனது ப்லோகேரை  பதிவை தொடரமுடியவில்லை இனியாவது தொடரலாம் என்று இப்போது நினைத்தேன் அதனால்தான் இப்போது ஆரம்பித்தேன் . ஆரம்பிக்குபோது நிறைய நினைத்தேன் அனால் இப்போ என்ன எழுதுவது என்று எனக்கு தெரிய வில்லை

மீண்டும் நல்ல சிந்தணைடனும் நல்ல செய்திகளுடனும் இனி தொடருவேன்..

என்றும் அன்புடன்...

புருஸ்லி .க