புதன், 27 செப்டம்பர், 2017

சுவையான வாழைப்பூ வடை



தேவையானப்பொருட்கள்:

வாழைப்பூ - 1
கடலைப்பருப்பு - 1 கப்
காய்ந்தமிளகாய் - 3
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
சோம்பு - 1 டீஸ்பூன்
இஞ்சி - ஒரு சிறு துண்டு
வெங்காயம் - 2
பச்சை மிளகாய்  - 2
கறிவேப்பிலை - தேவையான அளவு 
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது 
தேவைக்கேற்றவாறு


எண்ணை - பொரிப்பதற்கு (வேர்கடலை எண்ணெய்) 

செய்முறை:

கடலைப்பருப்பை, இரண்டு  அல்லது மூன்று மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.

வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

இங்கே குறிப்பிட்டுள்ளப்படி

வாழைப்பூவை, நறுக்கித் தண்ணீரில் போட்டு வைக்கவும்.

தண்ணீரிலிருந்து பூவை எடுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் அளவிற்கு, வேறு சுத்தமான தண்ணீரை ஊற்றி, அடுப்பில் வைத்து ஒரிரு நிமிடங்கள் நன்றாக கொதிக்க விட்டு கீழே இறக்கி, நீரை முழுவதும் வடித்து  விட்டு ஆற விடவும். சற்று ஆறியபின், கைகளால் நன்றாக பிழிந்தெடுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.

ஊறவைத்துள்ள  பருப்பை, நன்றாக அலசி, நீரை வடித்துவிட்டு, அத்துடன் காய்ந்தமிளகாய், இஞ்சி, சோம்பு, பெருங்காயம், உப்பு சேர்த்து  லேசாக  அரைத்துக் கொள்ளவும். 

 அரைத்ததை எடுக்கும் முன்  வெந்த வாழைப்பூவைப் போட்டு ஓரிரு சுற்றுகள் சுற்றி எடுத்துக் கொள்ளவும். அத்துடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும்.

எண்ணையைக் காயவைத்து, மாவை வடையாகத் தட்டிப் போட்டு, பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுக்கவும்..

மாலை நேரத்திற்கு ஏற்ற  சுவையான  வாழைப்பூ வடை தயார்.... 



வெள்ளி, 21 ஏப்ரல், 2017

பரங்கிகாய் குழம்பு

பரங்கிக்காய்  - ஒரு துண்டு, 
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 3, புளி எலுமிச்சை அளவு
மிளகாய் தூள்  3 டீஸ்பூன்
தனியாதூள் - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால்
டீஸ்பூன், கறிவேப்பிலை
சிறிதளவு, உப்பு - தேவையான அளவு
வெல்லத்தூள் & ஒருடேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய்  - 2.
தாளிக்க: கடுகு- அரை டீஸ்பூன்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
சோம்பு & அரை டீஸ்பூன் எண்ணெளிணி & 3 டேபிள்ஸ்பூன்.
வறுத்துப் பொடிக்க:
பொட்டுக்கடலை & ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் & டீஸ்பூன், பச்சரிசி & ஒரு டீஸ்பூன்.

பரங்கிக்காயை துண்டுகளாக்குங்க. 
வெங்காயம், தக்காளியைப் பொடியாகநறுக்குங்க. புளியை இரண்டரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்க. 
பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்கு வறுத்துப் பொடியுங்க. 
எண்ணெயைக் காயவைத்து தாளிக்கும் பொருட்களை சேர்த்து, 
பொன்னிறமானதும் வெங்காயம், பூண்டு சேர்த்து சிவக்க வதக்கி பரங்கிக்கா, தக்காளி,உப்பு சேருங்க. தக்காளி கரைய வதக்கி, புளித்தண்ணீர் சேருங்க. மிளகாய் தூள், மஞ்சள்தூள்,தனியாதூள், கறிவேப்பிலை சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு, வெல்லம், பொடித்த பொடி சேர்த்து 2
நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்க. இனிப்பும் புளிப்பும் கலந்த குழம்பு இது.
நன்றி தினகரன் 

வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

கடவுள் ஒரு இளைஞரிடம் தோன்றி





கடவுள் ஒரு இளைஞரிடம்  தோன்றி
உன் மரணம் நெருங்கி விட்டது
எப்போ உன் உயிரை நான் எடுப்பது என்றார்

அவனோ பதற்றத்துடன்  கடவுளே நான் இப்போதான் படித்து முடித்தேன் அதானால் எனக்கு சின்ன கடமை இருக்கு என் அம்மா அப்பா நண்பர்கள்,
கூட பிறந்தவர்களை பிரிய முடிய வில்லை,
எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் என்றான்.

கடவுளும் சரி நான் போய் வருகிறேன்.. என்று மறைந்தார்

பின் கொஞ்சம் நாள் கழித்து கடவுள் வந்தார் மனிதா வா போகலாம் என்றார்.

கடவுளே இப்போதுதான் நான் நல்ல வேலையில்  சேர்த்தேன் நல்ல சம்பளம் கொஞ்சம் பணம் கிடைத்ததும் வீடு கட்டணும்,
அம்மா அப்பாவை சந்தோஷமாக பார்த்துக்கணும்,
புதிய நண்பர்களுடன் கொஞ்சம் ஊர் சுற்றனும்,
இன்னும் கொஞ்சம் நாள் கொடுங்கள் சந்தோஷமாக இருந்துவிடுகிறேன் என்றான்.

கடவுளும் சரி நான் வருகிறேன் சொல்லிட்டு சென்று விட்டார்,

அவன் சொன்னது போன்று வீடு கட்டினான் நண்பர்களுடன்  சந்தோஷமாக இருந்தான்,

அவன் அப்பா அம்மா அவனுக்கு பெண் பார்த்து கல்யாணமும்  செய்து வைத்தார்கள்,வாழ்க்கை சந்தோஷமாக சிறிது  காலம்  நகர்ந்தது..

கடவுள் மீண்டும் வந்தார் பக்தா  என்று அழைத்தார்..

அவனோ பதறிபோய்  ஐயோ வந்து விட்டதே என்ன சொல்ல என்று தெரியாமல் மன்னிக்கவும் கடவுளே எனக்கு இப்போதான் கல்யாணம் ஆனது அதனால் கொஞ்சம் எனக்காக இல்லைனாலும் என் மனைவிக்காக கொஞ்சம் காலம் நான் உயிருடன் இருக்கணும் என்றான்.

கடவுள் சிரித்துக்கொண்டே
பக்தா நான் இப்போ வந்தது
உன் உயிரை பறிக்க அல்ல

நீ கல்யாணத்துக்கு முன்னாடி
சந்தோஷமாக இருக்கவே
நான் நடத்திய நாடகம் இது என்று கூறி விட்டு மறைந்து விட்டார்..

வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

பாலாற்று தடுப்பணையை உயர்த்தும் ஆந்திர அரசு: தமிழகம் வேடிக்கை பார்க்கக்கூடாது!

பாலாற்று தடுப்பணையை உயர்த்தும் ஆந்திர
அரசு: தமிழகம் வேடிக்கை பார்க்கக்கூடாது!














ஆற்று நீர் பகிர்வு பகிர்வு ஒப்பந்தத்தை தொடர்ந்து மீறி வரும் ஆந்திர அரசு, அடுத்தக்கட்டமாக பாலாற்று துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளின் உயரத்தை அதிகரித்தல், புதிய தடுப்பணைகளை கட்டுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. பணிகள் முடியும் தருவாயில் உள்ள நிலையில், அவற்றை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

கர்நாடகத்தில் உருவாகி ஆந்திரா வழியாக தமிழ்நாட்டில் பாயும் பாலாறு வட தமிழ்நாட்டின் முக்கிய பாசன ஆதாரமாக விளங்கியது. ஆனால், ஆந்திரத்தில் மொத்தம் 33 கி.மீ. தொலைவுக்கு மட்டுமே பாயும் பாலாற்றின் குறுக்கே மொத்தம் 22 தடுப்பணைகளை அம்மாநில அரசு கட்டியதால் தமிழ்நாட்டிற்கு நீர்வரத்து குறைந்து விட்டது. இதனால் ஒருகாலத்தில் பால் போன்று தண்ணீர் ஓடும் ஆறாக இருந்த பாலாறு பாலைவனமாக மாறிவிட்டது. ஆந்திரத்தில் தொடர்ந்து மழை பெய்து காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டால் தான் தடுப்பணைகளையெல்லாம் மீறி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வரும் என்ற நிலை ஏற்பட்டது. அப்போதும் ஆந்திர அரசு ஓயவில்லை. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் பாலாறு மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே 8 புதிய தடுப்பணைகளை கட்டியதுடன், பாலாற்றின் குறுக்கே ஏற்கனவே கட்டப்பட்டிருந்த 5 தடுப்பணைகளின் உயரத்தை உயர்த்தும் முயற்சியில் ஆந்திர மாநில அரசு ஈடுபட்டது. அதுகுறித்து ஜூலை மாத தொடக்கத்திலேயே தமிழக அரசை பா.ம.க. எச்சரித்தது. ஆனாலும், தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளாததால் அனைத்து தடுப்பணைகளும் கட்டி முடிக்கப்பட்டு விட்டன.

இதனால் பாலாற்று நீர் தமிழகத்திற்கு வருவது பெருமளவில் தடுக்கப்பட்டு விட்ட நிலையில், அதன் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிக்கும் பணிகளை ஆந்திர அரசு மேற்கொண்டு வருகிறது. பாலாற்றின் முக்கிய துணை ஆறுகளில் ஒன்றான சின்ன எரு என்ற ஆறு 16 கி.மீ தொலைவுக்கு காட்டு வழியே பாய்ந்து தமிழக எல்லையான புல்லூரிலிருந்து 7 கி.மீ தொலைவில் பாலாற்றில் கலக்கிறது. இந்த ஆற்றில் 16 கி.மீ தொலைவில் 12 தடுப்பணைகள் கட்டப்பட்டிருக்கின்றன. இவற்றில் கடைசியாக தமிழக எல்லை அருகில் சோமபள்ளம் என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையின் உயரம் 5 அடியிலிருந்து 8 அடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது. சின்னஎரு ஆற்றின் குறுக்கே உள்ள மேலும் 5 தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிக்கவும், பாலாற்றின் குறுக்கே 2 புதிய தடுப்பணைகளை கட்டவும் ஆந்திர அரசு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்தால் பாலாற்றிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் வருவது கனவாகி விடும். பாலாற்றில் ஏற்கனவே தடுப்பணைகள் கட்டப்பட்டிருக்கும் போதிலும், கடுமையான மழைக்காலங்களில் மட்டும் ஓரளவு நீர் தடுப்பணைகளை மீறி தமிழகத்திற்கு வந்து கொண்டிருந்தது. இதற்கு காரணம் பாலாற்றின் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தடுப்பணைகளின் உயரம் குறைவாக இருந்தது தான். ஆனால், இப்போது தடுப்பணைகளின் உயரம் அதிகரிக்கப்படுவதுடன் புதிய தடுப்பணைகளும் கட்டப்படுவதால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கிடைக்காது. இதனால் பாலாற்று தண்ணீரை நம்பியுள்ள 4.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாலைவனமாக மாறுவதை தடுக்க முடியாது.

பாலாற்றில் ஆந்திர அரசு தொடர்ந்து தடுப்பணைகளை கட்டுவதற்கு தமிழக அரசின் அலட்சியம் தான் காரணமாகும். சித்தூர் மாவட்டம் கணேசபுரத்தில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்ட ஆந்திரம் முயல்வதை எதிர்த்து தமிழக அரசும், பாட்டாளி மக்கள் கட்சியும் 2006-ஆம் ஆண்டில் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தடுப்பணை பணிகளுக்கு தடை விதித்தது. அதன்பின் கடந்த ஆண்டு புதிய தடுப்பணைகளை கட்டும் பணிகளையும், உயரத்தை அதிகரிக்கும் பணிகளையும் ஆந்திர அரசு மேற்கொண்டதையடுத்து, கடந்த 18.07.2016 அன்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இன்னொரு மனுவை தாக்கல் செய்தது. ஆனால், அதன்மீது எந்த உத்தரவையும் பெற தமிழக அரசு தவறிவிட்டது. பாலாற்றில் புதிய தடுப்பணைகள் உள்ளிட்ட எந்த பணியையும் மேற்கொள்ளக் கூடாது என ஆணை வாங்கியிருந்தால், இப்போது இவ்வளவு துணிச்சலாக ஆந்திரம் தடுப்பணை கட்டமுடியாது.

இப்போதும் கூட தடுப்பணைகள் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதை தடுக்க தமிழகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக அதிகாரிகளிடமிருந்து அறிக்கை கோரும் வழக்கமான பணியையே மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கை முடிவதற்குள் தடுப்பணைகள் கட்டும் பணிகளும் முடிவடைந்து விடும். எனவே, இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளையும், உயரத்தை அதிகரிக்கும் பணிகளையும் அரசு தடுக்க வேண்டும்.