வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

பாலாற்று தடுப்பணையை உயர்த்தும் ஆந்திர அரசு: தமிழகம் வேடிக்கை பார்க்கக்கூடாது!

பாலாற்று தடுப்பணையை உயர்த்தும் ஆந்திர
அரசு: தமிழகம் வேடிக்கை பார்க்கக்கூடாது!














ஆற்று நீர் பகிர்வு பகிர்வு ஒப்பந்தத்தை தொடர்ந்து மீறி வரும் ஆந்திர அரசு, அடுத்தக்கட்டமாக பாலாற்று துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளின் உயரத்தை அதிகரித்தல், புதிய தடுப்பணைகளை கட்டுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. பணிகள் முடியும் தருவாயில் உள்ள நிலையில், அவற்றை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

கர்நாடகத்தில் உருவாகி ஆந்திரா வழியாக தமிழ்நாட்டில் பாயும் பாலாறு வட தமிழ்நாட்டின் முக்கிய பாசன ஆதாரமாக விளங்கியது. ஆனால், ஆந்திரத்தில் மொத்தம் 33 கி.மீ. தொலைவுக்கு மட்டுமே பாயும் பாலாற்றின் குறுக்கே மொத்தம் 22 தடுப்பணைகளை அம்மாநில அரசு கட்டியதால் தமிழ்நாட்டிற்கு நீர்வரத்து குறைந்து விட்டது. இதனால் ஒருகாலத்தில் பால் போன்று தண்ணீர் ஓடும் ஆறாக இருந்த பாலாறு பாலைவனமாக மாறிவிட்டது. ஆந்திரத்தில் தொடர்ந்து மழை பெய்து காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டால் தான் தடுப்பணைகளையெல்லாம் மீறி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வரும் என்ற நிலை ஏற்பட்டது. அப்போதும் ஆந்திர அரசு ஓயவில்லை. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் பாலாறு மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே 8 புதிய தடுப்பணைகளை கட்டியதுடன், பாலாற்றின் குறுக்கே ஏற்கனவே கட்டப்பட்டிருந்த 5 தடுப்பணைகளின் உயரத்தை உயர்த்தும் முயற்சியில் ஆந்திர மாநில அரசு ஈடுபட்டது. அதுகுறித்து ஜூலை மாத தொடக்கத்திலேயே தமிழக அரசை பா.ம.க. எச்சரித்தது. ஆனாலும், தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளாததால் அனைத்து தடுப்பணைகளும் கட்டி முடிக்கப்பட்டு விட்டன.

இதனால் பாலாற்று நீர் தமிழகத்திற்கு வருவது பெருமளவில் தடுக்கப்பட்டு விட்ட நிலையில், அதன் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிக்கும் பணிகளை ஆந்திர அரசு மேற்கொண்டு வருகிறது. பாலாற்றின் முக்கிய துணை ஆறுகளில் ஒன்றான சின்ன எரு என்ற ஆறு 16 கி.மீ தொலைவுக்கு காட்டு வழியே பாய்ந்து தமிழக எல்லையான புல்லூரிலிருந்து 7 கி.மீ தொலைவில் பாலாற்றில் கலக்கிறது. இந்த ஆற்றில் 16 கி.மீ தொலைவில் 12 தடுப்பணைகள் கட்டப்பட்டிருக்கின்றன. இவற்றில் கடைசியாக தமிழக எல்லை அருகில் சோமபள்ளம் என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையின் உயரம் 5 அடியிலிருந்து 8 அடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது. சின்னஎரு ஆற்றின் குறுக்கே உள்ள மேலும் 5 தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிக்கவும், பாலாற்றின் குறுக்கே 2 புதிய தடுப்பணைகளை கட்டவும் ஆந்திர அரசு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்தால் பாலாற்றிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் வருவது கனவாகி விடும். பாலாற்றில் ஏற்கனவே தடுப்பணைகள் கட்டப்பட்டிருக்கும் போதிலும், கடுமையான மழைக்காலங்களில் மட்டும் ஓரளவு நீர் தடுப்பணைகளை மீறி தமிழகத்திற்கு வந்து கொண்டிருந்தது. இதற்கு காரணம் பாலாற்றின் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தடுப்பணைகளின் உயரம் குறைவாக இருந்தது தான். ஆனால், இப்போது தடுப்பணைகளின் உயரம் அதிகரிக்கப்படுவதுடன் புதிய தடுப்பணைகளும் கட்டப்படுவதால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கிடைக்காது. இதனால் பாலாற்று தண்ணீரை நம்பியுள்ள 4.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாலைவனமாக மாறுவதை தடுக்க முடியாது.

பாலாற்றில் ஆந்திர அரசு தொடர்ந்து தடுப்பணைகளை கட்டுவதற்கு தமிழக அரசின் அலட்சியம் தான் காரணமாகும். சித்தூர் மாவட்டம் கணேசபுரத்தில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்ட ஆந்திரம் முயல்வதை எதிர்த்து தமிழக அரசும், பாட்டாளி மக்கள் கட்சியும் 2006-ஆம் ஆண்டில் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தடுப்பணை பணிகளுக்கு தடை விதித்தது. அதன்பின் கடந்த ஆண்டு புதிய தடுப்பணைகளை கட்டும் பணிகளையும், உயரத்தை அதிகரிக்கும் பணிகளையும் ஆந்திர அரசு மேற்கொண்டதையடுத்து, கடந்த 18.07.2016 அன்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இன்னொரு மனுவை தாக்கல் செய்தது. ஆனால், அதன்மீது எந்த உத்தரவையும் பெற தமிழக அரசு தவறிவிட்டது. பாலாற்றில் புதிய தடுப்பணைகள் உள்ளிட்ட எந்த பணியையும் மேற்கொள்ளக் கூடாது என ஆணை வாங்கியிருந்தால், இப்போது இவ்வளவு துணிச்சலாக ஆந்திரம் தடுப்பணை கட்டமுடியாது.

இப்போதும் கூட தடுப்பணைகள் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதை தடுக்க தமிழகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக அதிகாரிகளிடமிருந்து அறிக்கை கோரும் வழக்கமான பணியையே மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கை முடிவதற்குள் தடுப்பணைகள் கட்டும் பணிகளும் முடிவடைந்து விடும். எனவே, இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளையும், உயரத்தை அதிகரிக்கும் பணிகளையும் அரசு தடுக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக