திங்கள், 2 ஏப்ரல், 2012

பற்களைப் பாதுகாக்கும் பிர்மதண்டு சாம்பல் பொடி




அமெரிக்காவில் மெக்ஸிகோ மாகாணத்தைச் சார்ந்த தாவரம் பிர்மதண்டு எனப்படுகிறது. இதற்கு குருக்கம், குருக்கமுத்து என்ற மற்றொரு பெயரும் உண்டு. இது தமிழகமெங்கும் தரிசு நிலங்களில், ஆற்றங்கரைகளில், சாலையோரங்களில் தானே வளரும் சிறு செடி. பளிச்சிடும் மஞ்சள் நிறப் பூக்களையும், காய்களுக்குள் கடுகு போன்ற விதைகளையும் உடையது. இத்தாவரத்தில் இலை, பால், வேர், விதை மற்றும் பூக்கள் மருத்துவ குணம் கொண்டவை.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

பெர்பெரைன், கிரிப்டோபைன், ஐசோகுயினோலைன் அல்கலாய்டுகள், மெக்ஸிகேனிக் அமிலம் மற்றும் மெக்ஸிகேனால் போன்ற வேதிப்பொருள் பிர்மதண்டு தாவரத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.

இருமல் போக்கும்

மலர்களுக்கு இருமல் போக்கும் சக்தி உள்ளது. விதைகளும், அதிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெயும் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுவலி போக்கும். வாந்தியை தூண்டும். சளி போக்கும், எண்ணெய் மேல் பூச்சாக தோல் வியாதிகள் மற்றும் தலைவலிக்கு மருந்தாகிறது. ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும். மஞ்சள் லேடக்ஸ் மருக்களை நீக்க உதவும்.

விதைகள் கடுகு விதைகளுடன் கலப்படம் செய்யப்படுகின்றன. இதனால் கடுகு எண்ணெயில் ஒருவித புரதம் சேர்ந்து கைகால் சோர்ந்து போகும் நோய் ஏற்படுகிறது.

பல்வலி குணமடையும்

இதன் இலைச்சாற்றை பத்து மில்லியாக காலையில் வெறும் வயிற்றில் 1 மாதம் கொடுத்து வரச் சொறி, சிரங்கு, மேகரணங்கள், குட்டம் ஆகியவை தீரும். இதன் இலையை அரைத்துத் தேள் கடி வாயில் வைத்துக் கட்டினால் தேள் கடி விஷம் இறங்கும். இலையை அரைத்துப் பூசி வர சொறி, சிரங்கு, உள்ளங்கால் நீர்வடியும் கரப்பான் படை குணமடையும். உள்ளங்கை, பாதங்களில் வரும் புண்கள் ஆறும்.

இதன் விதையை நெருப்பிலிட்டுப் புகைத்து அப் புகையை வாயில் படுமாறு செய்தால் சொத்தைப்பல் புழு வலி தீரும். செடியை உலர்த்திய பின் எடுத்துச் சாம்பலாக்கி, துணியில் சலித்து வைக்கவும். இப்பொடியில் பல் துலக்க பல் ஆட்டம், சொத்தை, சீல்வடிதல், வீக்கம் குணமடையும். இது சிறந்த பற்பொடி மருந்தாக செயல்படுகிறது.

இதன் சாம்பல் பொடியை 1-2 கிராம் தேனில்குழைத்து 48 நாட்கள் இருவேளை சாப்பிட வேண்டும். இதனால் ஆஸ்துமா, இரைப்பு, இருமல், காசம் ஆகிய நோய்கள் குணமாகும்,

வயிற்றுப்பூச்சிகள் வெளியேறும்

50 மில்லி பன்னீரில் ஒரு கிராம் சாம்பலை கரைத்து வடித்த தெளி நீரை சொட்டு மருந்தாக பயன்படுத்தலாம். கண், எரிச்சல், வலி, சிவப்பு, ஆகியவற்றிர்க்கு சொட்டு மருந்தாக பயன்படுத்தலாம். இலை சூரணம், விதைச் சூரணம் கலந்து 3 அரிசி எடை காலை, மாலை தேனில் கலந்து சாப்பிட க்ஷய இருமல், நுரையீரல், சளி இருமல் தீரும்.

இதன் வேரை அரைத்து 5 கிராம் அளவு 50 மில்லி லிட்டர் வெந்நீரில் கரைத்து காலை வெறும் வயிற்றில் கொடுக்க மலக்குடல்புழு, கீரிப்பூச்சிகள் வெளியேறும்.
50 கிராம் வேரை 200 மில்லி நீரில் நன்றாக கொதிக்க வைத்து வடித்து குடிநீராக குடித்து வர காசநோய், மேகநோய், குணமடையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக